இஸ்ரேலுடன் யுத்த நிறுத்த இணக்கப்பாடு தொடர்பில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அதிகாரியொருவர் வெளியிட்டுள்ள தகவல்! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

இஸ்ரேலுடன் யுத்த நிறுத்த இணக்கப்பாடு தொடர்பில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அதிகாரியொருவர் வெளியிட்டுள்ள தகவல்!

Share This

 இஸ்ரேலுடன் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் யுத்த நிறுத்த இணக்கப்பாட்டை எட்ட முடியும் என ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய தாக்குதல்களில் இரண்டு தரப்பும் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் இஸ்ரேலிய குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழல் உருவாக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார்.

மோதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு நிராகரித்துள்ள நிலையில்,  இன்று வியாழக்கிழமையும் இஸ்ரேலின் யுத்த விமானங்கள் காஸா நிலப்பரப்பில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் பலஸ்தீனியர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 227 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 11 நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் 64 பலஸ்தீன சிறுவர்களும் பலியாகியுள்ள அதேவேளை இஸ்ரேல் தரப்பில் 12 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தின் உட்கட்டமைப்புக்களை இலக்குவைத்து 100 தாக்குதல்களை இஸ்ரேல் விமானப் படையினர் நடத்தியுள்ளனர். காஸாவின் கரையோரப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாற்று திறனாளி ஒருவரும் அவரது மனைவியான கர்ப்பிணிப் பெண் மற்றும் 03 வயது குழந்தை ஆகியோர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் காஸா நோக்கி இஸ்ரேல் நடத்திய உந்துகணைத் தாக்குதல்களில் நான்கு சிறுவர்கள் உட்பட பல பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இந்த விமானத் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் நோக்கி ஹமாஸ் இயக்கமும் உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நேற்றைய தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹுவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், யுத்த நிறுத்தத்தை நோக்கிய நடவடிக்கையில் மோதல்களை குறிப்பிடத்தக்க அளவால் குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் ஜோ பைடனுடன் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்று ஒரு சில மணித்தியாலங்களில் கருத்து வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர், தமது இலக்கு எட்டப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என அறிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் முயற்சியும் முடங்கியுள்ளது.

இந்த விடயத்தில் அமெரிக்கா தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு கோரும் தீர்மானங்களை தடுத்து நிறுத்தி வருகின்றது. எனினும் இருதரப்பிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நாளை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என யுத்த நிறுத்தப் பேச்சுக்களில் ஈடுபடும் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி த வோல் ஸரீட் ஜேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் இயக்க தலைமையுடன் எகிப்து அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ள அதேவேளை இஸ்ரேலிய இராணுவமும் தமது நோக்கங்களை நிறைவுசெய்யும் கட்டத்தை எட்டியுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றியளிக்கும் என நம்புவதாக ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அதிகாரியான மூசா அபு மார்சூக் கூறியுள்ளார்.

பரஸ்பர உடன்படிக்கையின் அடிப்படையில் யுத்த நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் ஒரிரு நாட்களில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages