தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ஸ அரசாங்கமே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ளவும் தடை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினரே ஏற்க வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இறுதிகட்ட யுத்ததின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த நினைவு துாபி சேதமாக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இன்று காலை நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்திருந்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க விடாது தடை ஏற்படுத்திய ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பினருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச விசாரணைகளில் இருந்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பாதுகாத்து உள்ளக விசாரணைக்கு வழியேற்படுத்திய தரப்பினரும் முள்ளிவாய்க்கால் துாபி சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment